எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அடுத்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கிழக்குத் தொகுதியின் மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்தானந்த அளுத்கம இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த ஆண்டைக் காட்டிலும் இப்போதுள்ள நிலைமை மாறுபட்டுள்ளது. தற்போது மின்வெட்டு இல்லை, இன்று எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளது. 600 ரூபாவில் இருந்த பருப்பு 250 ரூபாயாக இருந்த அரிசி விலையும் தற்போது குறைந்துள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பொருட்களின் விலை மேலும் குறையும். மக்கள் வாழக்கூடிய சூழல் உருவாகி வருகிறது என்பதை நினைவூட்ட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் கடனை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டோம்.
எதிர்வரும் மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எனவே மேலும் அபிவிருத்தித் திட்டங்களை தொடர முடியும்" என அவர் தெரிவித்தார்.