கலேவல - குருணாகல் பிரதான வீதியின் பெலிகம பிரதேசத்தில் உள்ள பண்ணை ஒன்றில் பால் விற்பனை நிலையத்துக்குள் இரவு வேளையில் புகுந்த குழுவொன்று அங்கிருந்த காவலாளியின் கை, கால்களையும் வாயையும் கட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (25) பால் விற்பனை நிலையத்துக்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த பொருட்கள் சிலவற்றையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிய வந்துள்ளது.
இன்று காலை குறித்த காவலாளிக்கு உணவு கொண்டு சென்ற பெண் ஒருவர் சடலத்தைக் கண்டு இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த பால் விற்பனை நிலையம் இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.