இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிக ஹமாஸ் போராளிகளை கொன்று, பலரை சிறைப்பிடித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.
சனிக்கிழமை அதிகாலை சண்டை வெடித்ததில் இருந்து இஸ்ரேலிய தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
ஆனால் 2 கேணல்கள், ஒரு லெப்டினன்ட் கேணல் உள்ளிட்ட 44 இராணுவத்தினரும், 34 பொலிசாரும் கொல்லப்பட்டனர் என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
காசாவில் 100- 170 வரையான இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு நம்புகிறது.
இதேவேளை, காஸாவில் போராளிகள், பொதுமக்கள் என்ற வேறுபாடு இல்லாமல் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை அதிகாலையில், ஹமாஸின் திகைப்பூட்டும் தாக்குதல் ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுக்களை ஏவியதுடன், நூற்றுக்கணக்கான போராளிகள் எல்லை கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். இஸ்ரேலிய நகரங்களில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று, பலரைக் கடத்திச் சென்றதை தொ்டர்ந்து, இரண்டு நாட்களாக காசாவை துவம்சம் செய்து வருகிறது இஸ்ரேல்.
மோதல் காசாவிற்கு அப்பாலும் பரவக்கூடும் என்பதற்கான அறிகுறியாக, இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாஹ் போராளிகள் பரஸ்பரம் பீரங்கி மற்றும் ரொக்கெட் ,துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டனர்.
இரண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளையும், அவர்களின் எகிப்திய வழிகாட்டியையும் எகிப்பு பொலிஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.
கடந்த இரவில், காசாவில் வீட்டுத் தொகுதிகள், சுரங்கப்பாதைகள், ஒரு மசூதி மற்றும் ஹமாஸ் அதிகாரிகளின் வீடுகளை இஸ்ரேலிய வான்படை தாக்கியது. இதில் 20 குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு “இந்த பொல்லாத நாளுக்கு வலிமையான பழிவாங்கல்” என்று சூளுரைத்தார்.
தெற்கு இஸ்ரேலிற்குள் நேற்று சனிக்கிழமை ஹமாஸ் போராளிகள் ஊடுருவினர். 24 மணித்தியாலங்கள் கடந்தும் அவர்கள் பல இடங்களில் போரிட்டபடியுள்ளனர்.
பாலஸ்தீன போராளிகளிற்கு ஆதரவளித்துள்ள லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு, பாலஸ்தீனிய போராளிகளிடம் ‘எங்கள் துப்பாக்கிகளும் ரொக்கெட்டுகளும் உங்களிடம் உள்ளன’ என தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் போராளிகளின் ஊடுருவல் புள்ளிகளின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான தாக்குதல்காரர்களைக் கொன்றதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
2.3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் ஒரு குறுகிய பகுதியான காசாவைச் சுற்றியுள்ள பகுதியில் பல்லாயிரக்கணக்கான வீரர்களை நிலைநிறுத்தியுள்ளதாகவும், எல்லையில் வசிக்கும் அனைத்து இஸ்ரேலியர்களையும் வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அது கூறியது.
“நாங்கள் ஹமாஸை கடுமையாகத் தாக்கப் போகிறோம், இது ஒரு நீண்ட, நீண்ட பயணமாக இருக்கும்” என்று ஒரு இராணுவப் பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
காசாவில், ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்தெல்-லத்தீஃப் அல்-கனோவா, தாக்குதல் “எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்காக” நடந்ததாகக் கூறினார். இன்றும் ஹமாஸ் போராளிகள் ரொக்கெட் தாக்குதல்களைத் தொடர்ந்தனர்.
50 ஆண்டுகளுக்கு முன்பு யோம் கிப்பூர் போரில் இழந்த பகுதியை மீட்கும் முயற்சியில் எகிப்தும் சிரியாவும் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியிருந்தன. இந்த தாக்குதலிற்கு பின்னர், இஸ்ரேலுக்குள் நிகழ்ந்த மிகப்பெரிய மற்றும் கொடிய ஊடுருவல் இதுவாகும்.
இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்காக அமெரிக்க ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் நகர்வுகளை இந்த மோதல் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். பாலஸ்தீனர்களின் உரிமையை உறுதிப்படுத்தாத வரை இஸ்ரேலுடன் எந்த சமரசமும் இல்லையென்பதில் சவூதி உறுதியாக உள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவு இயல்பாகக்கூடாது என்பதற்காக ஈரானின் பின்னணியில் ஹமாஸ் இந்த தாக்குதலை நடத்தியதா என்ற கோணத்திலும் அணுக வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு 2006 இல் இஸ்ரேலுடன் ஒரு போரை நடத்தியது. அந்த முனையிலும் பதற்றமான உறவுகளே உள்ளன. “ஹிஸ்புல்லாஹ் இதற்குள் வர வேண்டாம் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம், அவர்கள் வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று இஸ்ரேலின் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்திய ஒரு நாள் கழித்து, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பாலஸ்தீனிய போராளி அமைப்புகளான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.
“இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜியாத் அல்-நகாலா மற்றும் [ஹமாஸ்] அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகியோருடன் பாலஸ்தீனத்தின் முன்னேற்றங்கள் குறித்து தனித்தனி தொலைபேசி அழைப்புகளில் ரைசி விவாதித்தார்,” என்று ஈரானிய செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. .
ஹமாஸின் தாக்குதலை ஈரான் பாராட்டி, இது ஒரு “பெருமைமிக்க நடவடிக்கை” மற்றும் “மகத்தான வெற்றி” என்று ரைசி பாராட்டியுள்ளார்.
“சியோனிச ஆட்சியின் வீழ்ச்சியை எளிதாக்கும் மற்றும் விரைவுபடுத்தும் இந்த வெற்றிகரமான நடவடிக்கை, சியோனிச ஆட்சியின் வரவிருக்கும் அழிவை உறுதியளிக்கிறது” என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் அலி அக்பர் வெலாயாதி கூறுகிறார்.
“இந்த பெரிய மற்றும் மூலோபாய வெற்றியை நான் வாழ்த்துகிறேன், இது பிராந்தியத்தில் உள்ள அனைத்து சமரசம் செய்பவர்களுக்கும் (இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்கிய அரபு நாடுகளைக் குறிப்பிடுகிறார்) இது ஒரு தீவிர எச்சரிக்கையாகும்,” என்று அவர் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாதுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை நேற்றிரவு கூடி, நாட்டை உத்தியோகபூர்வமாக போரில் ஈடுபடுத்த வாக்களித்தது. இதன்மூலம் “குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கைகளை” மேற்கொள்ள முடியும் என்று பிரதமர் அலுவலகம் அறிவிக்கிறது.
ஹமாஸ் போராளிபள் தெற்கு இஸ்ரேலுக்குள் ஊடுருவி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதை அடுத்து, அந்நாட்டில் போர் நடந்து வருவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் முடிவு இல்லாமல் நாடு போருக்கு செல்ல முடியாது என்று இஸ்ரேல் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சரவை முடிவு, அடிப்படைச் சட்டத்திற்கு இணங்க, பிரதமர் நெதன்யாகுவின் பிரகடனத்திற்கு சட்டப்பூர்வ நிலைப்பாட்டை வழங்குகிறது.
திகைப்பூட்டும் தாக்குதல் நடந்தது எப்படி?
இஸ்ரேலின் தெற்கில் நேற்று நடத்திய திகைப்பூட்டும் தாக்குதல் தொடர்பில் ஹமாஸ் வெளியிட்ட வீடியோவில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
முதலில், ஹமாஸ் ட்ரோன்களைப் பயன்படுத்தி எல்லையில் உள்ள இஸ்ரேலிய கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை குண்டுவீசித் தாக்கியது.
காசா எல்லையில் உள்ள இஸ்ரேலிய தளங்கள் மீது ட்ரோன்கள் வெடிகுண்டுகளை வீசுவதை காட்சிகள் காட்டுகிறது.
அடுத்து, தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேல் மீது ஏராளமாக ரொக்கெட்டுகள் ஏவப்பட்டன. பின்னர் பாராகிளைடர்களில் ஹமாஸ் போராளிகள் எல்லைக்குள் நுழைந்தனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஹமாஸ் போராளிகள் எல்லை வேலியை நெருங்கி, பெரியளவிலான வெடிமருந்துகளைப் பயன்படுத்தி துளைகளை வெடிக்கச் செய்து, நூற்றுக்கணக்கான போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவ வழியேற்படுத்தினது. லொறிகள், மோட்டார் சைக்கிள்களில் போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.
பின்னர் எல்லையோரத்தில் இருந்த இஸ்ரேல் இராணுவ நிலைகள் மற்றும் அருகில் உள்ள சமூகங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
ஹமாஸின் கடல் வழி ஊடுருவ லை முறியடித்ததாக இஸ்ரேல் அறிவித்தது.