பல்பொருள் அங்காடியில் அடிவாங்கிய பெண் போதைக்கு அடிமையானவர், ஏற்கனவே இவர் கடைகளில் திருடிய வழக்குகள் பல உள்ளன
பல்பொருள் அங்காடிகளிலோ அல்லது வேறு கடைகளிலோ பொருட்களைத் திருடும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது அவர்களைப் பற்றி அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவித்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கேட்டுக்கொள்கிறார்.
பொருட்கள் திருட்டு குறித்து விசாரணை நடத்த பொலிஸார் இருக்கும் போது, பொருட்களை திருடிய குற்றத்திற்காக யாரையும் தாக்க முடியாது என்றார்.
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு யாரையும் தாக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும், இது தொடர்பில் பல்பொருள் அங்காடிகளின் முகாமையாளர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொரளை கோட்டா வீதியிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடிய யுவதியை ஊழியர்கள் குழுவொன்று தாக்கும் காணொளி சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருவதாகவும், தாக்குதல் சம்பவத்தை மன்னிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடையில் யாரேனும் பொருட்களை திருடிச் சென்றதாக சந்தேகம் ஏற்பட்டால், அவர்களை தாக்குவது மாற்று வழி அல்ல என்றும், பணியாளர்கள் இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்து அந்த நபரையோ பெண்ணையோ பிடித்து பொலிஸில் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
பொரளையில் உள்ள பல்பொருள் அங்காடியில், ஹன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டதாகவும், அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பெண் போதைப்பொருள் பாவனைக்காக பொருட்களை திருடியுள்ளதாகவும், கடைகளில் பொருட்களை திருடியதற்காக இவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸ் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.