அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து செயல்படும் பிரபல குற்றவாளி 'மன்னா ரமேஷ்' துப்பாக்கிச் சூட்டுக்கு மூளையாக செயல்பட்டவருக்கு அந்த பத்திரிக்கையாளர் இரகசிய தகவலை வழங்கியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளால் நேற்றிரவு மீகொட பிரதேசத்தில் வைத்து குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற காலப்பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபருடன் குறித்த ஊடகவியலாளர் கைத்தொலைபேசியில் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.
மேலும் மன்னா ரமேஷ் என்பவர் ஊடகவியலாளரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பல தடவைகள் பணத்தை வைப்பிலிட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு அடைக்கலம் வழங்கிய ஊடகவியலாளர் மூவரும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளரை 72 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன், ஏனைய மூன்று சந்தேகநபர்களை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)