சீதுவ, தண்டுகம் ஓயா பகுதியில் கடந்த வியாழக்கிழமை (14) பயணப்பை ஒன்றுக்குள் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நபர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாக பிறிதொரு பிரதேசத்தில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு, பின்னர் பயணப்பைக்குள் இடப்பட்டு குறித்த பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லானவத்தை, கிந்திகொட பிரதேசத்தின் தண்டுகம் ஓயாவின் கரையோரப் பகுதியில் பயணப்பொதி ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக 119 எனும் பொலிஸ் அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஒருவர் என்பதுடன் 05 அடி 08 அங்குல உயரமும், சராசரியான உடலும், 02 அங்குல நீளமான முடியும் கொண்ட ஆண் என பொலிஸார் தெரிவித்தனர். அவர் சிவப்பு சட்டை மற்றும் பழுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் கழுத்தில் வலப்புறம் 7 நட்சத்திர அடையாளங்களுடன் பச்சை குத்தப்பட்டிருந்தமையும் தலை மற்றும் கன்னம் ஆகிய இருபுறங்களிலும் காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இனங்காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.வை.எம்.சியாம்