தெஹிவளை பள்ளிவாசல் காணி அபகரிப்பு விவகாரம்! பேருவளை ஹில்மி இடமிருந்து உலமாக்களுக்கு ஒரு பகிரங்க மடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெஹிவளை பள்ளிவாசல் காணி அபகரிப்பு விவகாரம்! பேருவளை ஹில்மி இடமிருந்து உலமாக்களுக்கு ஒரு பகிரங்க மடல்!


அஸ்ஸலாமு அலைக்கும் எனது கண்ணியத்துக்குரிய உலமா சமூகமே !

சவூதி அரேபியாவை சேர்ந்த தனவந்தர் உமர் ஸாலி அப்துல் அஸீஸ் பாபக்கர் என்பவரால், தெஹிவளை கல்விகாரப் பிளேசில் அமைந்துள்ள மஸ்ஜித் பாபக்கர் எனும் மஸ்ஜிதும், அதனுடன் உள்ள சுமார் 80 போச்சஸ் காணியும், இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு தனவந்தர் பாபக்கர் அவர்களால் வாங்கி அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.

1997 ஆம் ஆண்டு சமூகத்திற்காக வாங்கி அன்பளிப்பு செய்யப்பட்ட இக்காணியில், பல மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தில், ஒரு பள்ளி வாசல், பெண்களுக்கான தொழுகையிடம், வாசிக சாலை, ஒரு பாடசாலை, வெளி ஊர் மாணவர்கள் கொழும்பு வந்து தங்கி மேற்படிப்பை மேற்கொள்ள அறைகளை அமைப்பது இவரின் வஸீயத்தாகும்.

மேலும் இதை வாங்கிய இவர் தன் மனதால் அல்லாஹ்வுக்காக வக்பு செய்யப்பட்ட இதன் இரகசியங்களையும் இவ்வளவு காலமும் சுமார் 26 வருடங்களாக இரகசியமான முறையில் வைத்திருந்தது குறித்தும், வக்பு வாரியத்தில் பதியப்படாமல் அபாகரிக்க முற்படும் சில உலமாக்கள் சம்பந்தமான தகவல்களையும் திருட்டுத்தனமாக திருத்தப்பட்ட சில தஸ்தாவேஜிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தேன்.

இதைத் தொடர்ந்து சில தரப்புக்களால் எனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதோடு, இச்செய்தியில் உள்ள அனைத்தும் அவதூறு என்றும் பொய்யானவை என்றும் இவர்களால் கூறப்பட்டது.

மேலும் இவ்வளவு கலமாக மூடி மறைக்கப்பட்ட இந்த ரகசிங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிடப்பட்டு, சமூக ரீதியாகப்பட்ட இப்பிரச்சினை தொடர்பில் வக்பு வாரியம், சமூக முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவரும் இச்சொத்து காப்பாற்றப்பட வேண்டும் என்ற நன்நோக்குடன் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 14.09.2023 அன்று இப்பள்ளி வாசலில் ஜும்ஆவிற்கு நியமிக்கப்பட்டவர் அபகரிப்பாளர்களால் நிறுத்தப்பட்டு, பதிலுக்கு வேறு ஒரு உலமா நியமிக்கப்பட்டார்.

இவர் தனது பிரசங்கத்தின் போது அபகரிப்பாளர்களை காப்பாற்ற முற்பட்டதோடு இவை அத்தனையும் அவதூறுகள் என்றும், மக்கள் அதிருப்தி அடையும் விதத்திலான ஒரு பிரசங்கத்தை நடத்திச் சென்றார்.

மேலும் இது தொடர்பாக அக்கு வேறு ஆணிவேராக ஆதாரங்களுடன் வெளியிட்ட தகவல்களை இவர் படித்திருக்கவில்லை என்றும் இவர் முலமே அறிய கிடைத்தது. இது சம்பந்தமாக இவரை அணுகி சிலர் விளக்கம் அளிக்க முற்பட்டபோது அதற்கும் அவர் அனுமதி வழங்கவில்லை.

கண்ணியமான உலமாக்களே கட்டுரைக்கு சொந்தக்காரன் நானாக இருக்கும்போது, என்னை அணுகி இது சம்பந்தமான தெளிவுகளை பெற்றுக் கொள்ளாமல் ஒருதலைப் பட்சமாக அனைத்தும் அவதூறு என சாடுவதுடுவது, நீதியையும் நியாயத்தையும் சமூகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு சமூக வழிகாட்டிக்கு முறைதானா?

ஒரு சாரார் சொன்ன நியாயங்களை கையில் எடுத்து ஒருபக்க சார்பாக
நியாயப்படுத்த, புனிதமிக்க பள்ளிவாசலையும் புனிதமிக்க பிம்பர் மேடையையும் பயன்படுத்தலாமா? 

தான் பொதுவாகத்தான் பேசுகின்றேன், பொதுவாகத்தான் பேசுகிறேன், என அடிக்கடி சொல்லிக் கொண்ட போதும், குற்றம்சாட்டும் தரப்பை அணுகாமல், குற்றம் சாட்டப்பட்ட தரப்பின் நியாயங்களை முன் வைப்பது ஒரு சமூக வழிகாட்டியின் வழிகாட்டல் தானா? ஒரு குர்ஆன் மதரஸாவில் ஓதி பலாகி பட்டம் பெற்றவருக்கு இது அழகுதானா?

இப்பிரசங்கத்தில் இவை அவதூறு என்றும், அவதூறுக்கான தண்டனை என்ன என்பதையும் மார்க்க வழிகாட்டலின் அடிப்படையில் தெளிவுபடுத்திய இவர், பொதுச் சொத்தை அபகரிப்பவர்களுக்கும், அதற்குரிய தண்டனைகளையும் தன் பிரசங்கத்தின் போது உள்வாங்காதது ஏன்?

மேலும் இவ்வாறான விடயங்கள் சமூக வலைத்தளங்களில் எழுதப்படக்கூடாது. மானங்கள் காக்கப்பட வேண்டும் என்ன பீரங்கிப் பேச்சாளராக உரை நிகழ்த்தியவருக்கு சமூக சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நியாயம் கவலை ஏன் தெரியவில்லை.

இன்று கோடிக்கணக்கான பொதுச்சொத்துக்களை அபகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ள வேளையில், இவை அத்தனையும் சமூக வலைத்தளங்கள் மூலம் சமூக மயப்படுத்தப்பட்டு அனைத்தையும் பாதுகாக்கும் விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் சமூக வலைத்தளங்களில் மூலம் இவை வெளியிடப்படக்கூடாது என மூடி மறைத்து சமூகமயமாக்கப்படாமல் தொடர்ந்தும் சமூக சொத்துக்களை திருடிச் செல்ல அனுமதி வழங்குவதா? இதன் மூலம் திருடர்களை பாதுகாப்பதா? 

தவறு மன்னிக்கப்பட வேண்டும் குற்றம். தண்டிக்கப்பட வேண்டும்.

பொதுச் சொத்தை, பொதுச் சொத்தாக பாதுகாக்கும் விதத்தில் பொதுச் சொத்துக்கு பொறுப்பான வக்பு வாரியத்திடம் கையளிக்காது 26 வருடங்களாக திட்டமிட்டு பொதுச் சொத்தை திருட முற்படுவது மன்னிக்கக் கூடிய தவறா? தண்டிக்கக் கூடிய குற்றமா என்பதை முதலில் கண்ணியத்துக்குரிய பலாகி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இது சம்பந்தமாக நம் சகோதரர்கள் தனவந்தர் பாபக்கர் அவர்களை தொடர்பு கொண்டு விடயங்களை கேட்டு அறிந்த போது, அவர் கூறிய விடயமானது, இலங்கையில் இனவாத பிரச்சனை உள்ளதால் தனது திட்டத்தை அமுல்படுத்த முடியாதுள்ளது. என கூறியுள்ளார் .

இவை அபகரிப்பாளர்களால் தனவந்தருக்கு கூறப்பட்ட செய்திகளாகும். அவ்வாறு இல்லாது இருந்திருந்தால் தனவந்தர் தன் திட்டத்தை செய்து முடித்து இருப்பார். இந்த இடத்தை வாங்கிய பாபக்கர் அவர்கள் இதற்கான கட்டிடத்தை அமைக்க தயாரான வகையில் இதன் plan உம் சவ்தி அரேபியாவில் இருந்து
வரைந்து அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  இதனால் சமூகத்துக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு அல்லாஹ்விடம் இவர்கள் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

மேலும் வக்பு சொத்துக்கள் அபகரிக்கப்படும் இக்கால கட்டத்தில் தைரியமாக எதிர்த்து நின்று குரல் கொடுக்கும் குரல்களை நசுக்க முற்படுவதை கண்ணியமிக்க உலமா சமூகம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தட்டிக் கேட்பவனை தடுக்க முற்படாதீர்கள். அவன் கேட்டுக் கொண்டே இருக்கட்டும். அவன் சமூகத்தின் ஒரு வீரம் மிக்க சொத்து. பிழை இருந்தால், அவனிடம் தவறு இருந்தால் தாழ்மையுடன் சுட்டிக்காட்டி திருத்துங்கள்.

எனது மதிற்பிற்குரிய கண்ணியத்துக்குரிய உலமா சமூகமே, தாங்கள் மீது ஒரு தார்மீக பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. எந்த இடத்திலும், எந்த வரப்பிரசாதங்களுக்கும் விலை போகாதீர்கள். உலகத்தை துச்சமாய் மதியுங்கள். நீதி நியாயம் என வரும்போது உங்கள் சக்திக்கு ஏற்ப இரு தரப்பினரையும் அணுகி நீதி நியாயங்களை வழங்குங்கள். 

ஒரு பள்ளிவாசலுக்காக ஒரு சான் நிலம் வாங்க முடியாத நிலையில், சமூக சொத்துக்களையும் பள்ளி வாசல்களையும் பாதுகாக்க திடசந்தர்ப்பம் பூணுங்கள்.

இதில் செயல்படும் உலமா தரப்பு ஊதியத்திற்கா உழைப்பவர்களாக இருக்கலாம். ஆனால் இதில் பள்ளிவாசல் என வாதடும் தரப்பு, அவர்களின் சொந்த செல்வங்களையும், பொண்ணான நேரங்களையும், காலங்களையும் செலவு செய்து, எதிர்கால சந்ததியினருக்கான பள்ளிவாசல் என்ற சிந்தனையுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடி உழைப்பவர்கள். அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்.

எனவே வாழ்ந்து சென்றோர் வழியில் நறுமணம் வீசும் நட் பிரஜைகளாக வாழ்ந்து, வாழ்ந்தோம், மடிந்தோம் என்றில்லாமல், வாழ்ந்து சென்ற பூமிக்கு நன்றி சொல்ல தடம் பதித்து விட்டுச் செல்லுங்கள்...

-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.