எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், கட்டண உயர்வின் மூலம் பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை என சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டீசல் விலை உயர்வினால் பஸ் கட்டணம் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் அண்மைய விலையேற்றம் 4%க்கு அதிகமாக இருந்தால், பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பேருந்து கட்டண திருத்தம் குறித்த முடிவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று அறிவிக்கும் என்று மூத்த அதிகாரி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)