கொலன்ன பகுதியில் வைத்து வர்த்தகர் ஒருவர் வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது கடத்துப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய தேடப்பட்டு வந்த குறித்த நபர் மிரிஹான பொலிஸாரினால் தெல்கந்த பகுதியில் முச்சக்கர வண்டியில் இருந்த போது நேற்று (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இது கடத்தல் அல்ல எனவும் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்கவே கடத்தல் போன்ற பிம்பத்தை உருவாக்கி தலைமறைவாகி இருக்க தாம் முன்னெடுத்த திட்டமிட்ட நாடகம் எனவும் குறித்த வர்த்தகர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கொலன்ன பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைவாக வர்த்தகர் பயணித்த வேன் அனில்கந்த பகுதியிலுள்ள பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.வேனின் சாரதி ஆசனத்துக்கு அருகில் மிளகாயத்தூள் வீசப்பட்டு இருந்தது. எனினும் மிளகாய் தூள் வீசப்பட்ட விதத்தில் சந்தேகம் நிலவுவதாக கூறிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மிரிஹான பொலிஸாருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் குறித்த வர்த்தகர் தெல்கந்த பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய உடனடியாக பொலிஸ் குழுவொன்று குறித்த பகுதிக்கு அனுப்பிய நிலையில் குறித்த வர்த்தகர் முச்சக்கரவண்டி ஒன்றினுள் அமர்ந்திருந்த போது கைது செய்யப்பட்டதுடன், அவருடன் இருந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
37 மற்றும் 62 வயதுடைய றக்குவான மற்றும் கங்கொடவில பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து வர்த்தகருக்கு வழங்கப்பட்ட இரண்டரை இலட்சம் ரூபா பணம், பல்வேறு நபர்களுக்கு வங்கியில் பணத்தை வைப்பு செய்த பற்றுச்சீட்டுகள் மற்றும் வர்த்தகர் நுகோடைக்கு வருகை தருவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் குறித்த கடத்தல் சம்பவம் வர்த்தகர் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலும், இது கடத்தல் அல்ல எனவும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் காரணமாகவும் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பிலிப்பிட்டிய குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.