வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு திரைப்படங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளுக்கான அனுமதி கட்டணம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும் உரிமம் பெறுவதற்கு தற்போதுள்ள கட்டணங்கள், பொது நிகழ்ச்சித் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, வெகுஜன ஊடகத்துறை அமைச்சரால் வெள்ளிக்கிழமை (11) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இது தொடர்பான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 40,000 ரூபாயும் உள்நாட்டு திரைப்படங்களுக்கு 15,000 ரூபாயும் அனுமதி கட்டணமாக செலுத்தப்படவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், முன் விளம்பரப் படத்திற்கு மாத்திரம் 1,500 ரூபாயும் வரையறுக்கப்பட்ட காட்சிகளுக்கு டி.வி.டி/புலுரே திரைப்படங்களுக்கு 1,500 ரூபாயும் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்.
இதனடிப்படையில் மேற்கூறப்பட்ட பணி ஆய்வுகளுக்கு திரையரங்குகளை பயன்படுத்தும் கட்டணம் 37,500 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேடை நாடகங்களை பொருத்தவரை நீண்ட மற்றும் குறுகிய நாடகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்ட நாடக கட்டணங்களாக 1,500 ரூபாயும் குறுகிய நாடகங்களுக்கு 750 ரூபாயுமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேடை நடகங்கள் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் காட்சிபடுத்தலுக்கு 21 நாட்களுக்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும் எனவும் குறித்த கால எல்லைக்குள் வழக்கப்படாத பிரதிகளுக்கு உரிய கட்டணத்தின் நூற்றுக்கு நூறு சதவீத மேலதிக கட்டணம் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இசைக் கச்சேரிகள் மற்றும் காட்சிப்படுத்தல் கட்டணங்களாக, உள்நாட்டு கலைஞர்கள் பங்குபற்றும் இசை கச்சேரிகளுக்கு 3,750 ரூபாய், உள்நாட்டு கலைஞர்கள் பங்குபற்றும் மண்டப இசைக் கச்சேரிகளுக்கு 3,700, வெளிநாட்டு கலைஞர்கள் பங்குபற்றும் திறந்தவெளி கச்சேரிகளுக்கு 37,500 எனவும் வெளிநாட்டு கலைஞர்கள் பங்குபற்றும் மண்டப மற்றும் தொலைக்காட்சி, வானொலி மூலம் நேரடியாக ஏற்பாடு செய்யப்படும் கச்சேரிகளுக்கு 37,500 ரூபாய் எனவும் முன்பள்ளி கச்சேரிகளுக்கு 2,000 ரூபாய் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.
அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் காட்சிபடுத்தலுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக ஒப்படைக்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக, கல்வி, கலாசார மற்றும் சமய முக்கியத்துவமிக்க எந்தவொரு காட்சிபடுத்தலுக்குமான அனுமதிக் கட்டணத்தை 14 நாட்களுக்கு முன்னர் எழுத்துமூலம் சமர்ப்பி வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனுமதிப்பத்திரங்கள் காணாமல் போகும் பட்சத்தில் மீண்டும் ஒன்றை பெற்றுக்கொள்ள 1,500 ரூபாய் கட்டணமாக அறவிடப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.