காத்தான்குடி பொலிஸ் பிரிவில் நேற்று (14) மட்டக்களப்பு மாவட்ட மோட்டார் போக்குவரத்து பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 27 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாமை, தலைக்கவசம் அணியாமை போன்ற குற்றச்சாட்டுகளில் குறித்த 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆரையம்பதி, நாவற்குடா, கல்லடி ஆகிய இடங்களில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி சரத் சந்திர தெரிவித்தார்.
காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் சுமார் 3 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகணவின் விஷேட பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளமை குறிப்பிடத்தக்கது.