புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுடன் தொடர்புடைய தங்கக் கடத்தல் முயற்சி தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் இந்த வாரத்தின் முற்பகுதியில் பாராளுமன்ற சபாநாயகரிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் சுங்க திணைக்களம் விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளதாக த டெய்லி மோர்னிங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரஹீம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, சட்டவிரோத முறையில் துபாயில் இருந்து 80 மில்லியன் பெறுமதிமிக்க தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பனவற்றைக் கொண்டு வந்தமை தொடர்பில் சுங்கத் திணைக்களம் அறிக்கை தயாரித்துள்ளது.
மேலும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் போது நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சபாநாயகர் எம்.பி. ரஹீமிடம் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. எனினும், அவர் இது தொடர்பில் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
எம்.பி. ரஹீம் கடந்த மே 23 அன்று சட்டவிரோத தங்கம் மற்றும் மொபைல் போன்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய எம்.பி.யிடம் இருந்து மொத்தம் 3.5 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை விமான நிலையத்தில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் 7.5 மில்லியன் ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் எம்பி விடுவிக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)