2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையில் இருந்து 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்த முன்னாள் ஜனாதிபதி, எஞ்சிய 85 மில்லியன் ரூபாவை செலுத்துவதற்கு மேலும் கால அவகாசம் கோரியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மொத்தமாக 75 மில்லியனில் இருந்து 1.75 மில்லியன் ரூபாவை தீர்த்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது மொத்த இழப்பீட்டுத் தொகையான 50 மில்லியனில் இருந்து 1 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் தனது மொத்தத் தொகையான 10 மில்லியனில் இருந்து 5 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் அரச புலனாய்வு சேவைகளின் தலைவர் நிலந்த ஜயவர்தன தனது இழப்பீட்டுத் தொகையான ரூபா 75 மில்லியனில் இருந்து இதுவரை எவ்வித கொடுப்பனவுகளையும் வழங்கவில்லை.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இழப்பீட்டு நிதியில், ஜூலை 12, 2023 க்கு முன்னதாக, உரிய தீர்வுகளை வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தால் முன்னாள் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பலர் தாக்கல் செய்த 12 மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)