போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, இலங்கை உட்பட எட்டு நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வர்த்தக ஆலோசனை சேவையையும், சமயப் போதனைகளையும் நிகழ்நிலை மூலம் நடத்துவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிகழ்வு நிகழ்நிலை மூலம் நடத்தப்படுவதாகவும், இலங்கையிலுள்ள ஒரு வங்கிக் கணக்கிற்கு 210 ஐக்கிய அமெரிக்க டொலர்களை செலுத்தி அதில் வர்த்தகர்கள் கலந்து கொள்வதாகவும் விசாரணைகள் மூலம் தகவல்கள் தெரியவந்துள்ளன.
அவ்வாறான ஒரு போதனை நிகழ்வு மூலம் குறித்த போதகர் ஒரு வாரத்தில் 1.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ தனது பிரசங்கங்களை நடத்திய கட்டுநாயக்கவில் அமைந்துள்ள ‘மிராக்கிள் டோம்’ என்ற நான்கு ஏக்கர் காணியின் உரிமையாளரிடமும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
ஆலயம் ஒன்றை அமைப்பதற்காக நன்கொடையாக அந்தக் காணியை தான் ஜெரோமிற்கு வழங்கியதாக பொலிஸ் உத்தியோகத்தராகவிருந்து ஆடை வர்த்தகராக மாறிய குறித்த காணியின் உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த கோடீஸ்வர தொழிலதிபர் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதுடன் தற்போது ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவராவார்.
இவ்வாறான பல தொழிலதிபர்கள் மற்றும் பெரும் வர்த்தகர்கள் போதகரின் பின்பற்றுபவர்களாக இருப்பதுடன், அவர்களில் முன்னணி வாகனங்கள் வர்த்தகர் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.