த்ரெட்ஸ் (Threads) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மெட்டா நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து ட்விட்டர் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டா (Meta) நிறுவனத்தினால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் செயலியில் 18 மணித்தியாலங்களில் 30 மில்லியன் பயனாளர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் (Threads) சமூக வலைத்தள பக்கத்திற்கு போட்டியாக இந்த செயலி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக செல்வந்தர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க், கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்து புதிய விதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றார்.
இதற்கு ட்விட்டர் பயனாளர்களில் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் சட்டத்தரணி அலெக்ஸ் ஸ்பிரோ (Alex Spiro) நேற்றையை தினம் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி மார்க் ஸக்கர்பெக்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களை பணியமர்த்துவதன் மூலம், வர்த்தக இரகசிய திருட்டு இடம்பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ட்விட்டரின் வர்த்தக இரகசியங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், மெட்டா நிறுவனத்திடமிருந்து இதற்கு உடனடியாக பதில் வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.