"அஸ்வெசும" நலன்புரி வேலைத்திட்டத்தில் சுமார் 20 இலட்சம் குடும்ப அலகுகளுக்கு நன்மைகள் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் நடத்திய கலந்துரையாடல்களில் வறிய மக்களை அதிலிருந்து மீட்பதற்கு குறைந்தது 187 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை அரசாங்கம் அதனை 206 பில்லியன் ரூபா வரை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம். வெளிப்படைத்தன்மையுடன் மிகவும் பொருத்தமான குழுவிற்கு இதன் கீழ் நன்மைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பயனாளர்கள் இந்த மாதத்திலேயே நன்மைகளை பெற்றுக்கொள்வார்கள். "அஸ்வெசும" நலன்புரி வேலைத்திட்டத்தில் சுமார் 20 இலட்சம் குடும்ப அலகுகளுக்கு நன்மைகள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சமுர்த்திக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்ப அலகுகளில் 70 சதவீதமான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இந்த நலத்திட்ட உதவி கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இத்திட்டத்தில் பலர் நிராகரிக்கப்பட்டிருந்த காரணத்தால் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்கப்பட்டு நியாயமான முறையில் பயனாளிகளை உள்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.