இணையவழி விண்ணப்ப முறைமையின் மூலம் சுமார் 35,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், இதுவரை 3,700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் கடந்த 20 ஆம் திகதி வரையில் 35,145 பேர் கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
அவர்களில் 16,869 விண்ணப்பதாரர்கள் மட்டுமே உரிய பிரதேச செயலகங்களில் தங்களது கைரேகைகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்களில் 3,712 பேருக்கான கடவுச்சீட்டுகள் மட்டுமே தற்போது வரை விநியோகிக்கப்பட்டுள்ளன.
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் பல விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விரைவில் சிக்கல்களை நிவர்த்தி செய்து, கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.