இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ எனும் வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருட ஆரம்பத்தில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் டிஜிட்டல் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை வேலைத்திட்டம் கடந்த வருடம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான தகவல் தொழிநுட்பக் கட்டமைப்பை இலங்கையில் நிறுவுவதற்கும் டிஜிட்டல் மயப்படுத்தலின் போது, டிஜிட்டல் அடையாள அட்டை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனவும் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.