டிக்டொக் மூலம் காதலித்த மனைவியை விபச்சாரத்தில் தள்ள முற்பட்டதால் மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக் ஊடாக சீதுவை பகுதியைச் சேர்ந்த இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாடசாலை கல்வியை கைவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி சீதுவைக்குச் சென்று காதலனை திருமணம் செய்துள்ளார் குறித்த மாணவி.
திருமணமாகி சில வாரங்களில், சீதுவை இளைஞன் தனது காதல் மனைவியை பணத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றுள்ளார்.
அதனையடுத்து குறித்த யுவதி அங்கிருந்து தப்பித்து யாழ்ப்பாணம் திரும்பி பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சீதுவை இளைஞன் குறித்த யுவதியை தொடர்பு கொண்டு தன்னிடம் வருமாறும் இல்லையெனில், காதலித்த நேரங்கள் மற்றும் திருமணமான பின்னர் இருவரும் மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் விரக்தியடைந்தயுவதி தவறான முடிவெடுத்து, தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.