யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு அவரது வங்கிக் கணக்கிலிருந்து 15 இலட்சம் ரூபா பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெண்ணொருவரின் தலைமையில் இந்த துணிகர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணி விற்பதாக குறிப்பிட்டு வாங்கிய பணத்தை முதியவர் மீள ஒப்படைக்காததையடுத்து அவரை கடத்திச் சென்று கொடுத்த பணத்தை மீளப்பெற்றுள்ளனர்.
அரியாலை, நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த 69 வயதான கணக்காளர் ஒருவரே கடத்தப்பட்டுள்ளார்.
புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த பெண்ணொருவருக்கு காணியை விற்பதாக குறிப்பிட்டு, ரூ.15 இலட்சம் பெற்றதாகவும், அவர் காணியை விற்காததுடன் பணத்தை மீள வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை காணி பார்க்க வருவதாக வேறொருவர் மூலம் நாடகமாடி, முதியவரை கல்வியங்காட்டு பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு வைத்து முதியவரை வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.
முதியவரை தாக்கி, அவர் கொடுக்க வேண்டிய ரூ.15 இலட்சம் பணத்தையும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து மீளப்பெற்ற பின்னர், இரவு கல்வியங்காட்டில் இறக்கி விடப்பட்டுள்ளார்.
அவர் நேற்றிரவே இது தொடர்பில் கோப்பாய் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்தார்.
கடத்தியது, தாக்கியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பெண்ணையும், மேலும் 4 பேரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.