வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓமனியாமடு பகுதியில் தண்ணீர் கொண்டு செல்லும் பௌசர் வண்டியில் மோதி 6 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்தமையை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
குறித்த பௌசர் வண்டியை பின்நோக்கி செலுத்திய போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 மற்றும் 6 வயதுடைய இரண்டு சிறுவர்கள் விபத்துக்குள்ளாகினர்.
அவர்களில் 6 வயது சிறுவன் உயிரிழந்தமையை அடுத்து பௌசர் வண்டியின் சாரதி மற்றும் அதன் உதவியாளர் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து பிரதேச மக்களால் குறித்த பௌசர் வண்டிக்கு தீ வைக்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம் பிரதேச மக்களால் குறித்த சாரதி உள்ளிட்ட இருவரும் பிடிக்கப்பட்டதுடன் பின்னர் அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் பௌசர் வண்டியின் சாரதியும் அதன் உதவியாளரும் மதுபோதையில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் காவல்துறையினர் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
அதேநேரம் சம்பவத்தில் உயிரிழந்த 6 வயது சிறுவனின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.