இலங்கையின் பொறுப்பு கூறல் உள்ளக பொறிமுறைக்கமையவே முன்னெடுக்கப்படும். மாறாக எக்காரணத்துக்காகவும் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட மாட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 2 கோடி இலங்கை பிரஜைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுமே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாது என்றும் அமைச்சர் அலிசப்ரி திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் கடந்த ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமானது. இதன்போது இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீப் முன்வைத்திருந்தார்.
குறித்த அறிக்கையில், 'இலங்கை பொறுப்புகூறலை உறுதிப்படுத்துவதற்கு தாமதிக்கும்பட்சத்தில், சர்வதேச விசாரணைப் பொறிமுறை உள்ளிட்ட வலுவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியேற்படும்.' என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொறுப்பு கூறல் விவகாரத்தில் இலங்கையில் என்ன செய்ய முடியுமோ அதனை நாம் செய்வோம். இவ்விடயத்தில் சர்வதேச பொறிமுறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் இலங்கையிலுள்ள மக்கள் மத்தியில் மேலும் பிரிவினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே பொறுப்பு கூறல் விவகாரத்தில் வெளிநபர்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. மாறாக இலங்கைப் பிரஜைகளான 22 மில்லியன் மக்களுக்கே பொறுப்பு கூற வேண்டியுள்ளது. இந்த நிலைப்பாட்டில் இலங்கை ஸ்திரமாகவுள்ளது என்றார்.
எம்.மனோசித்ரா