யாழ்ப்பாணம், கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 17 வயதுடைய சிறுமியொருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சிறுமி வீட்டார்களுடன் கதைப்பதை வீட்டு உரிமையாளர் தடுத்ததுடன் பல்வேறு நெருக்கடிகளை வழங்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் அறியமுடிகிறது.
வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்கிற 17 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த நான்கு மாதங்களாக சிறுமி கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள குறித்த வீட்டில் தங்கி நின்று வீட்டுப் பணிப்பெண்ணாக பணி புரிந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (23) வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தினர் நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் குறித்த சிறுமி தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.
சிறுமியின் சடலம் தூக்கில் தொங்கியவாறு முழங்கால் நிலத்தில் முட்டியவாறு நிலத்தில் காணப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினார்.
குறித்த சிறுமியை பார்க்க யாரும் வரக்கூடாது என்று தெரிவித்த வீட்டு உரிமையாளர் மாதத்தில் ஒரு முறை மாத்திரம் கதைக்க முடியுமென தெரிவித்ததாக சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுவதுடன் இவ் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமி குடும்ப வறுமையின் காரணமாக வீட்டு பணிப்பெண்ணாக இருந்த நிலையில் பல்வேறு அழுத்தங்களை சிறுமி எதிர்கொண்டதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.