மனித படுகொலை மற்றும் கைக்குண்டை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
பரீட்சையில் விடையளித்துக் கொண்டிருந்த அந்த கைதி, சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை, தொடங்கஹவத்த பிரதேசத்தைச் வசிப்பிடமாகக் கொண்டவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக இந்த மாணவன் மாகொல ஆண்கள் தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
சாதாரண தர பரீட்சையின் இறுதி நாளான நேற்று (08) சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் பரீட்சை மண்டபத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.
பரீட்சைக்குத் தோற்றியிருந்த அவர், பரீட்சையின் இடைநடுவில் மலசலக்கூடத்துக்குச் செல்லவேண்டுமென பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
அவருடைய அனுமதியுடன், சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் அருகிலுள்ள மலசலக்கூடத்துக்கு கைதியை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அதிகாரிகள் இருவரையும் தள்ளிவிட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவனை கைது செய்வதற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.