திருமணமான மறுநாளே புதுமணத் தம்பதிகள் படுக்கையறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோடியா பகுதியைச் சேர்ந்த பிரதாப் யாதவ் (24) மற்றும் அவரது மனைவி புஷ்பா யாதவ் (22) ஆகியோர் திருமணமான மறுநாள் காலையில் தங்கள் படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. மாரடைப்பால் இருவரும் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்களின் மரணத்தில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. இதற்கு முன் இதயநோய் இல்லாத இருவர் எப்படி ஒன்றாக மாரடைப்பால் இறந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இறந்த தம்பதியரின் உள் உறுப்புகள் ரசாயன ஆய்வுக்கு அனுப்பப்படும் என்றும் பல்ராம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதாப் யாதவுக்கும், புஷ்பாவுக்கும் மே 30 (செவ்வாய்கிழமை) அன்று இரவு திருமணம் இடம்பெற்றது. திருமண நிகழ்ச்சி முடிந்து பிரதாப் வீட்டிற்கு சென்றனர். இரண்டு நாள் திருமண விழா காரணமாக இருவரும் சோர்வாக இருந்தனர். அதனால் இருவரும் சீக்கிரம் தூங்கச் சென்றனர். ஆனால், வியாழன் மதியம் அவர்கள் வெளியே வராமல் போனதையடுத்து, சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸில் புகார் செய்யப்பட்டது. பொலிஸார் படுக்கையறையை சோதனை செய்தனர். வன்முறை நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். அறையில் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான தடயமும் இல்லை என்றும், உடலில் காயங்களோ, கீறல்களோ எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை அவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், இருவரின் மரணத்திற்கும் மாரடைப்பு தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை பொலிஸாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நேரத்தில் அவர்களுக்கு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என்பதுதான் சந்தேகம்.
சில பொலிஸ் அதிகாரிகளும் தம்பதியரின் அறையில் காற்றோட்டம் இல்லை என்று கூறியுள்ளனர். லக்னோவில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இருவரின் உள் உறுப்புகளும் ரசாயனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பெறப்படும் அறிக்கையிலிருந்து சில முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று பொலிஸார் நம்புகின்றனர்.
இருவரும் புதன்கிழமை சாப்பிட்ட உணவு என்ன என்றும் விசாரணை நடந்து வருகிறது. தடயவியல் குழு நேற்று தம்பதியின் படுக்கையறையை சோதனைமேற்கொண்டுள்ளது.