ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் 5 மில்லியன் வைப்பாளர்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் (29) நடைபெற்றிருந்தது.
இதில் வைத்து அவர் குறித்த விடயங்களை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) மீது கைவைக்கும் எண்ணம் இல்லை. ஊழியர் சேமலாப நிதியத்திற்கு குறைந்தபட்சம் 9% வட்டி வீதத்தை உறுதிப்படுத்த முடியும்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் வரையில் பணப்புழக்கம் தொடர்பிலான ஊகங்களை தடுப்பதற்காகவே வெள்ளிக்கிழமை (30) வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
நாட்டின் வங்கித் துறையில் சரிவு ஏற்பட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதால் வங்கித் துறையைப் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.