நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டைத் தீர்க்கும் வகையில் தாய்க் கோழிகளுக்குப் பதிலாக ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோழிக் குஞ்சு பொறிக்கும் முட்டைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தயாராகவுள்ளதாக தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிறில் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு 44 ஆயிரம் முட்டைகள் என்ற அடிப்படையில் ஒரு மாத காலத்திற்குள் நாட்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் முட்டைகள் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டை நீக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (08) விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
தாய் கோழிகளை இறக்குமதி செய்வதில் காலதாமதம் ஆவதால், முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டன.
ஒரு மாத குறுகிய காலத்தில் முட்டை மற்றும் இறைச்சி கிடைப்பது கடினம் என்பதால், கோழிக்குஞ்சு பொறிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எனவே, கொவிட்-19 பரவலின் போது மூடப்பட்ட தனியார் துறை கோழிப்பண்ணைகளுக்கு நெதர்லாந்தில் இருந்து பெறப்படும் கோழிக்குஞ்சு பொறிக்கும் முட்டைகளை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.