காலி, கராப்பிட்டிய பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு (10) 11.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அக்மீமன - வஞ்சாவல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.
அக்மீமன காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் நேற்றிரவு குறித்த பகுதிக்கு சோதனைக்காக சென்றுள்ளனர்.
அதன்போது சந்தேகத்துக்கிடமான வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டு, குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் அதன் அருகில் சென்றபோது, அங்கிருந்த சந்தேகநபர்கள் இருவர் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
அவர்களை தப்பிச் செல்லவிடாமல் காவல்துறை உத்தியோகத்தர்கள் தடுக்க முற்பட்டபோது, அவர்களில் ஒருவர் காவல்துறையினர் மீது கைக்குண்டை வீச முயன்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் காவல்துறை உத்தியோகத்தர்களில் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபரொருவர் காயமடைந்து, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து T-56 ரகத்தைச் சேர்ந்த 105 தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.