இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிபந்தனைகளை மீறி, உரிய எரிபொருள் கையிருப்புக்களை பேணாத நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆலோசனை வழங்கியுள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படும் 1,050 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த வாரம் 432 நிலையங்கள் மட்டுமே அனைத்து வகை எரிபொருட்களுக்கும் குறைந்தபட்ச கையிருப்பை வைத்திருந்ததாகவும், 255 விற்பனை முகவர்கள் எந்தவொரு எரிபொருளுக்கும் உரிய கையிருப்பை பராமரிக்கத் தவறியதாகவும் அமைச்சர் கூறினார்.
இதன்காரணமாகவே மக்கள் எரிபொருளுக்கான நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
363 விநியோகஸ்தர்கள் ஒரு எரிபொருளுக்கு மட்டுமே உரிய இருப்பை வைத்திருந்தமை கண்டறியப்பட்டதாக கூறிய அமைச்சர், ஒப்பந்த விதிமுறைகளை மீறும் விநியோகஸ்தர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளை அறிவுறுத்தினார்.