க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் வன்முறைச் செயற்பாடுகள் சமூகத்தில் நிலவும் வன்முறைகளின் தன்மையை வெளிப்படுத்துவதாக உளவியல் தொடர்பான வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாடசாலைகளின் வளங்கள் மற்றும் அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்திருந்த பல சம்பவங்களும் மோதல்களில் ஈடுபட்டிருந்த செய்திகளும் பதிவாகியுள்ளன.
திம்புலாகல மகுல்தமன மகா வித்தியாலய மாணவர்கள் குழுவொன்று வகுப்பறைகளின் மின் விசிறிகள் மற்றும் மலசலக்கூட கதவுகளை உடைத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் மனம்பிட்டிய காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன், கண்டி - கட்டுகஸ்தோட்டை பகுதியிலுள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழுவொன்று அண்மையில் மாணவர் ஒருவரை கிரிக்கெட் விக்கெட்டால் தாக்கியதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை அவரது ஆண் நண்பர் ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் கண்டி தென்பிடிகம பகுதியில் பதிவாகியுள்ளது.
மரதன்கடவல பிரதேசத்தில் பரீட்சை நிறைவடைந்து உந்துருளியில் பயணித்த மாணவன் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கருத்துரைத்த, காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியல் தொடர்பான வைத்தியர் ரூமி ரூபன், அண்மைக்காலமாக பதிவாகும் இவ்வாறான கட்டுப்பாடற்ற நடவடிக்கைகள் சமூகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறுவதாக குறிப்பிட்டார்.
பரீட்சை நிறைவடைந்த பின்னர் கிடைக்கப் பெறும் சுதந்திரத்தை மாணவர்கள் வன்முறை வடிவில் வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயற்பாடுகளில் சமூகத்தில் நிலவும் வன்முறையை வெளிப்படுத்துவதாகவும் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியல் தொடர்பான வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
தம்முள் காணப்படுகின்ற வன்முறையை தாக்குதல் அல்லது தூற்றுதல் போன்ற சம்பவங்களின் ஊடாக வெளிப்படுத்தி, அதில் சந்தோசத்தை அடையும் சமூகம் உருவாகுவதாகவும் வைத்தியர் ரூமி ரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.