கொழும்பில் காலி முகத்திடலில் உள்ள பிச்சைக்காரர்களை ஹம்பாந்தோட்டை ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்திற்கு இடமாற்றம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் பிச்சை எடுப்பவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
காலி முகத்திடல் மைதானத்தில் சுமார் 150 பிச்சைக்காரர்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், இந்த கூட்டு முயற்சியை மேற்பார்வையிடுமாறு இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை பொலிஸாருக்கு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதுடன், கூட்டுத்தாபன சமூக பொறுப்புணர்வு (CSR) முன்முயற்சிகளின் கீழ் இத்திட்டத்திற்கு நிதியை ஒதுக்குமாறு துறைமுக அதிகாரசபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையத்திற்கு மாற்றப்படும் பிச்சைக்காரர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் தேவையான வசதிகளை இந்த நிதியில் செய்து தருவதாக அமைச்சர் நிமல் சிறிபால மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)