தனது சிறுநீரை பிளாஸ்டிக் போத்தலில் நிரப்பி, மற்றொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
திவுலபிட்டிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி மீதே, தனியார் பஸ்ஸின் சாரதியால் இவ்வாறு சிறுநீர் தாக்குதல் மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், சாரதிக்கு அண்மையில் உள்ள ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் சிறுநீர் பட்டுத் தெறித்துள்ளது.
குருநாகல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், பயணிகளை ஏற்றுவதற்காக மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பில் இருந்து மினுவாங்கொடையை நோக்கி பயணித்த தனியார் பஸ் சாரதியே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார். பஸ்ஸை செலுத்திச் சென்றுக்கொண்டிருந்த போது, அவர் மதுபோதையில் இருந்தமை கண்டறிப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கொழும்பு, கரையோர பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தனியார் பஸ் சாரதியிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு, எதிர்வரும் 09ஆம் திகதியன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்ட கரையோர பொலிஸார், அவரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.