டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த 19 வயதேயான சுலேமான் தாவூத், உலக சாதனையை முறியடிக்க விரும்பியதால், தனது ரூபிக்ஸ் கியூப்பை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாய் கிறிஸ்டின் தாவூத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக நீர்மூழ்கியின் சென்ற சுலேமானும் அவரது தந்தையும் ஷாஜதாவும் நீர்மூழ்கி நசுங்கி நொறுங்கிய விபத்தில் இறந்தனர்.
ரூபிக் கியூப்பை கொண்டு உலக சாதனையை பதிவு செய்வதற்காக தந்தை ஷாஜதா தனது கேமராவைக் கொண்டு சென்றிருக்கிறார். கின்னஸ் உலக சாதனைக்காகவும் விண்ணப்பித்திருக்கிறார்.
டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளான நேரத்தில் கிறிஸ்டின் தாவூதும் கடலின் மேற்பரப்பில் நீர்மூழ்கிக்கு உதவுவதற்காக நின்று கொண்டிருந்த போலார் பிரின்ஸ் கப்பலில் இருந்தனர். அப்போதுதான் நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது.
"அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு அந்த நேரத்தில் புரியவில்லை. பின்னர் நீர்மூழ்கி அங்கிருந்து கீழ்நோக்கிச் சென்றது," என்று கிறிஸ்டின் கூறினார்.
டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குப் பிறகு தாவூத் குடும்பத்தினர் அளித்த முதல் பேட்டி இதுவாகும்.
டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்க்க தனது கணவருடன் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
"நான் பின்வாங்கிவிட்டு, (சுலேமானை) அழைத்துச் செல்ல இடம் கொடுத்தேன். ஏனென்றால் அவன் உண்மையில் செல்ல விரும்பினான்" என்றார் கிறிஸ்டின்.
சுலேமான், அவரது தந்தை ஷாஜதா தாவூத், மேலும் மூன்று பேர் நீர்மூழ்கியில் இறந்தனர். டைட்டனுக்குச் சொந்தமான ஓஷன்கேட்டின் 61 வயதான தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு கடற்படையின் முன்னாள் ஆழ்கடல் வீரர் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் அந்த மூவர்.
தனது மகன் சுலேமான் ரூபிக்ஸ் கியூப்பை மிகவும் நேசித்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின் தாவூத்.
போகுமிடமெல்லாம் ரூபிக்ஸ் கியூபை எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்ட சுலேமான், 12 வினாடிகளில் கியூபை சரி செய்து பார்வையாளர்களை திகைக்க வைத்ததாகவும் கூறினார்.
டைட்டானிக் கப்பலில் 3,700 மீட்டர் கடலுக்கு அடியில் ரூபிக்ஸ் கியூபை நான் தீர்க்கப் போவதாக சுலேமான் கூறிச் சென்றதாகவும் கிறிஸ்டின் தெரிவித்தார்.
சுலேமான் பிரிட்டனின் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தின் மாணவர், பிரிட்டனில் வசித்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத், பாகிஸ்தானின் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தந்தையர் தினத்தன்று 17 வயதான மகள் அலினா, உட்பட குடும்பத்தினர் டைட்டானை நோக்கிய பயணத்துக்காக போலார் பிரின்ஸ் கப்பலில் ஏறினர்.
கணவரும் மகனும் டைட்டன் நீர்மூழ்கியில் ஏறுவதற்கு முன் சில நிமிடங்களில் அவர்கள் கட்டிப்பிடித்து கேலி செய்து கொண்டிருந்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின்.
"நான் அவர்களை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தேன். ஏனென்றால் அவர்கள் இருவரும் மிக நீண்ட காலமாக டைட்டானிக்கை பார்க்க விரும்பினர்" என்று அவர் கூறினார்.
தனது கணவர் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்து கொள்ள அதீத ஆர்வம் கொண்டிருந்தார் என்று கூறுகிறார் கிறிஸ்டின். இரவு உணவிற்குப் பிறகு தங்களை இது தொடர்பான ஆவணப்படங்களைப் பார்க்க வைத்ததாகவும் அவர் கூறுகிறார்.
"குழந்தை போன்ற உற்சாகம் அவருக்குள் இருந்தது," என்று அவர் கூறினார்.
கணவரும் மகனும் திரும்பி வருவதற்காக கிறிஸ்டின் தாவூத்தும், மகள் அலினாவும் போலார் பிரின்ஸ் கப்பலில் காத்திருந்தார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல தேடல் மற்றும் மீட்பு பணியில் இருந்த நம்பிக்கை குறைந்து போனது.
"96 மணிநேரத்தை கடந்தபோது நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்," என்றார் கிறிஸ்டின்.
அப்போதுதான் தன் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பியதாக கூறினார். "நான் மோசமான நிலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்”
ஆனால் மகள் அலினாவுக்கு கூடுதலாகச் சற்று நேரம் நம்பிக்கை இருந்தது. "அமெரிக்காவின் கடலோரப் படையின் அழைப்பு வரும் வரை அவள் நம்பிக்கை இழக்கவில்லை. சிதைவுகளைக் கண்டுபிடித்ததாக அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தபோது அதுவும் முடிந்துவிட்டது."
தாவூத் குடும்பம் சனிக்கிழமை செயின்ட் ஜான்ஸுக்குத் திரும்பியது. ஞாயிற்றுக்கிழமை ஷாஜதா மற்றும் சுலேமானுக்கு இறுதிச் சடங்கு நடத்தியது.
தானும் மகளும் சுலேமானின் நினைவாக ரூபிக்ஸ் கியூப்பை முடிக்க கற்றுக் கொள்ள முயற்சிப்போம் என்றும், தனது கணவரின் பணியைத் தொடர விரும்புவதாகவும் கூறினார் கிறிஸ்டின்.
"அவர் பல செயல்களில் ஈடுபட்டார். பலருக்கு உதவினார். அந்த மரபைத் தொடரவும் விரும்புகிறேன்.. இது என் மகளுக்கும் மிகவும் முக்கியமானது."
விபத்து தொடர்பான விசாரணைகள் குறித்து பேச கிறிஸ்டின் மறுத்துவிட்டார்.
"அவர்களது பிரிவால் துன்புறுகிறேன்," அவர் ஆழமாக மூச்சு விட்டார்.
"நான் உண்மையில் அவர்கள் இல்லாததை உணர்கிறேன்" என்றார்.