அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்கள், பள்ளிவாசல் சொத்துக்கள், வக்பு சொத்துக்கள் சூறையாடப்படும் செய்திகள் வெளிவந்த வண்ணமே உள்ளது.
இந்த வரிசையில் கோடான கோடி பெருமதிக்க கபூரியா சொத்தின் சாதனையை மிஞ்சும் விதமாக ராஜகிரியவில் உள்ள நூறானியா பள்ளிவாசலும் அதனை அடுத்துள்ள மதரஸாவுக்கான ஆறு காணிதுண்டுகளின் அபகரிப்புச் செய்தி வெளிவந்துள்ளது.
ஒரு சில தினங்களுக்கு முன்பு தனியார் இணைய வழி தொலைக்காட்சி ஒன்றின் மூலம் வெளியிடப்பட்ட இவ்வக்பு சொத்து அபகரிப்பானது சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் வெளிவந்து கொண்டிருக்கும் பொதுச் சொத்து அபகரிப்புகளில் பின்னிருந்து செயல்பட்டுள அத்தனை சம்பவங்களிலும் மார்க்கத்தை கற்றறிந்த சமூக சீர்திருத்தவாதிகளாகிய உலமாக்கள் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருந்து கொண்டிருக்கின்றது.
இந்த இனைய வழி தொலைக்காட்சி மூலம் பெயர் குறிப்பிடப்பட்ட ஹஸன் பரீத் மெளலவி அவர்களுக்கு எதிகராக வெளியிடப்பட்ட அத்தனை ஆதாரபூர்வமான சாட்சியங்களும் தஸ்தாவேஜிகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.
இந்த வக்பு சொத்து விடயத்தில் முன்னுக்கு பின் முரணாக இவர்கள் நடந்து கொண்டுள்ள விதம், முன்னுக்கு பின் முரணாக உள்ள ஆவணங்கள், நேருக்கு மாறாக கையெய்பமிடப்பட்டுள்ள ஆவணங்கள், அனைத்தையும் உற்று நோக்கும்போது அல்லாஹ்வை பயந்து நடக்கும் ஒரு உலமா சம்பந்தப்படுவாரா என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
இது சம்பந்தப்பட்ட உலமாக்கள் ஆன்மீக நிறுவனங்கள் இதுவரையில் ஊமையாக இருப்பதானது இந் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அத்தனை திருட்டுக்களும் உண்மையானவை என்பதை சர்ச்சைக்குரியவர்கள் வாய் திறக்காத வரை சமூகத்துக்கு எடுத்துரைக்கும்.
இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் அத்தனை பேரும் இலங்கையில் முதல் நிலையில் உள்ள உலமாக்களாகும்.
இதைவிட இந்த விடயம் அகில இலங்கை ஜமியத்துல் உலமாவிடம் முறையிடப்பட்டபோது, அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள், இதனை விசாரிக்க ஒரு குழுவை நியமித்த நிலையில், இக்குழுவில் அங்கம் வகித்த இருவரும் குறித்த வக்பு சொத்தை அபகரித்த நிறுவனத்திற்கு. நிறைவேற்று அதிகாரிகளாக பதவியில் அமர்த்தப்பட்டது இன்னுமொரு வேடிக்கைக்குரிய விடயமாகும்.
இதையும் மிஞ்சும் விதமாக இதை விசாரித்து இது பொது சொத்து, ஆகவே இதை பள்ளிவாசலுக்கு திருப்பி ஒப்படையுங்கள் என தீர்ப்பு வழங்கிய வக்பு சபை, ஒரு மாதத்திற்குள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வக்பு சொத்தை கையகப்படுத்த அனுமதி கொடுத்தது உலாக சாதனை படைத்த ஒரு விந்தையாகும்.
கபூரியா அபகரிப்பில், குறிப்பிட்ட அபகரிப்பாளர் நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டும், அதனை கையகப்படுத்தியமைக்கான காரணமும், இங்கு தீவிரவாதம் போதிக்கப்படுகின்றது என்பதாகும்.
இக்குற்றச்சாட்டானது சொத்தை கைப்பற்றுவதற்காக இவர் மேற்கொண்ட தந்திர உபாயங்களில் ஒன்றாகும்.
இதே வேலை அபகரிப்பாளருக்கு இன்றும் பின் நின்று உதவிக் கொண்டுப்பவர்களும் உலமாக்களே.
சமூகத்தின் இச்சொத்தை அபாகரிக்க முஸ்லிம் சமூகத்தின் மீது வைக்கப்பட்டுள்ள அவதூறை உண்மைப்படுத்த உதவுபவர்களும் உலமாக்களே.
இதேபோன்று நூறானிய பள்ளிவாசலின் சொத்தை அபாகரிக்க முற்பட்டிருப்பதும் பிரபலமான உலமா ஒருவரே.
இதனை இலங்கை முஸ்லிம்களின் தலைமை ஆன்மீக நிறுவனத்திடம் முறையிட்டபோது, விசாரிக்க குழு அமைத்தவரும் ஒரு உலமாவே, அமைத்த குழுவில் அங்கம் வகித்தவர்களும் உலமாக்களே.
இறுதியில் வஞ்சகத்தில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு நிர்வாக தலைமை இயக்குனர்களாக மாறியவர்களும் அவர்களே.
இறுதியாக முஸ்லிம் சமூகத்தின் சொத்தினை பாதுகாக்க சட்டத்தினால் கூட்டினைக்கப்பட்ட நிறுவனமே பொதுச் சொத்தை தனியார் நிறுவனம் கையகப்டுத்த அனுமதியும் அளித்துள்ளது.
சமூகத்தை வழி நடாத்த வேண்டிய உலமாக்கள் , சமூகத்தின் ஒளி விளக்குகள், சமூக சீர்திருத்த வாதிகளின் நிலைமை இவ்வாறாக மாறும் போது எதிர்கால சமுதாயத்தின் நிலைமை கேள்விக் குறியாகவே அமையும்.
இதை விட இவர்கள் சமூகத்தை வழி நடாத்தும் அதி உயரிய சபையில் தொடர்ந்தும் அங்கத்தவர்களாக இருப்பதும், இது போன்ற சபைகளில் தொடரந்தும் அங்கத்தவர்களாக வைத்திருப்பதும், இது அல்லாஹ்வுக்கு பாத்திரமாக நடக்கும் ஆன்மீக சபையா அரசியல் சபையா என்பதை சிந்திக்க வேண்டியதுள்ளது.
இதற்கு மேலும் இதை யாரிடம் சொல்ல, யாரைத் தான் நம்ப.
வல்லவனுக்கு வழிபட்டு சமூகத்தின் சாரதிகளாக சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய உயரிய சபைகளில் இது போன்றவர்கள் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா?
வேலியே பயிரை மேய்கின்றதா??
-பேருவளை ஹில்மி