குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரீட்சைகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்த சட்டரீதியாக குறித்த ஒரு மாதத்தை அறிவிக்கவுள்ளதாகவும், அதனை மாற்றுவதானால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற வேண்டும் எனவும், மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் தவிர அதனை மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாணவர்களை 13 வருடங்கள் பாடசாலைக் கல்வியில் தக்கவைக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்த ஜனாதிபதி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் அவசியம் தொடர்பில் துரிதமாக தீர்மானம் எட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பிற்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முதலாவது கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் ஒன்றைக் கோரினார்.
அத்துடன், தொழில்நுட்பத்துடன் கல்வி இணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும், பாடசாலை முறையின் தரத்தை பேண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதி, பாடசாலை மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.
அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் தரமான கல்வி வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக ஆய்வு அலுவலகங்கள் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.
தொழிற்பயிற்சி துறையில் உடனடி மாற்றங்கள் தேவை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்ட நாடு நிச்சயமாக அபிவிருத்தியை நோக்கி நகரும். எனவே எதிர்கால தொழில்சந்தைக்குத் தேவையான பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்களை உருவாக்குவதற்கு இலங்கையின் தொழிற்பயிற்சித் துறை துரிதமான மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
2048 ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்குகளை அடைவதற்கு முறையான கல்வி முறைமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிற்கு தேவை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.