மாத்தளை - லக்கல, தாஸ்கிரிய பகுதியில் பரிகார பூஜையொன்றில் பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து சடங்குகளை செய்த பேயோட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (16) மாலை முதல் நேற்று சனிக்கிழமை காலை வரை பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் பங்கேற்றதாகவும் தெரியவந்துள்ளது.
அவர்களின் ஒரு பெண் திடீரென சுகவீனமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கல்கிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடங்கு செய்த பேயோட்டுபவர், சடங்கு செய்யும் போது 21 இளநீரை மூன்று நபர்களுக்கு அவ்வப்போது குடிக்க கொடுத்துள்ள நிலையில், அதில் ஒரு பெண் திடீரென நோய்வாய்ப்பட்டார்.
அதன்போது குறித்த பேயோட்டி அந்த பெண்ணுக்கு மஞ்சள் தூள் கலந்த தண்ணீரை குடிக்க கொடுத்துள்ளார்.
அதனை அருந்திய பெண் கடும் சுகவீனமடைந்து தாஸ்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் 25 வயதான பேயோட்டும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.