அவுஸ்திரேலியாவின் மிகவும் மோசமான பெண் சீரியல் கொலைகாரி என்று பெயரெடுத்த கேத்லீன் ஃபோல்பிக் 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கேத்லீன் ஃபோல்பிக் (Kathleen Folbigg) என்ற தாய் தன்னுடைய நான்கு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கடந்த 2003ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து கேத்லீன் ஃபோல்பிக் அவுஸ்திரேலியாவின் மிகவும் மோசமான பெண் சீரியல் கொலைகாரி என்ற பெயர் பெற்றார்.
கேத்லீன் ஃபோல்பிக், ஒன்பது மாதம் முதல் 03 வயது வரையிலான அவருடைய குழந்தைகளை மூச்சிறைக்க செய்து கொன்றதாக வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால் கேத்லீன் ஃபோல்பிக் குழந்தைகள் இயற்கையான வழியிலேயே இறந்ததாக உறுதியாக நின்றார். இருப்பினும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் விளக்கப்படாத உயிரிழப்புகள் அரிதான மரபணு மாற்றங்கள் மற்றும் பிறவி அசாதாரணங்களுடன் தொடர்புடையவை என வெளியான புதிய தடயவியல் சான்றிதழ்களை மேற்கோள்காட்டி 2021ம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அறிவியலாளர்கள் கேத்லீன் ஃபோல்பிக் விடுதலைக்காக கோரிக்கையை முன் வைத்தனர்.
இதனடிப்படையில் நியூ சவுத் வேல்ஸ் அட்டர்னி ஜெனரல் மைக்கேல் டேலி, கேத்லீன் ஃபோல்பிக் மன்னிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் இதன்மூலம் கேத்லீன் ஃபோல்பிக் விரைவாக சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
2003 ல் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட கேத்லீன் ஃபோல்பிக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சிறைவாசத்தில் கழித்துள்ளார்.