கம்பளை - எல்பிட்டிய யுவதி பாத்திமா முனவ்வராவின் மரணத்துக்கு நீதி கோரி இன்று (25) கம்பளை நீதிமன்றத்துக்கு முன்பாக மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கம்பளை மற்றும் எல்பிட்டிய பிரதேச மக்கள் ஒன்றினைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் கொலையாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
கொலையுடன் தொடர்புடையதாக சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
கெலிஓயா பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றிவந்த 22 வயதான பாத்திமா முனவ்வரா கடந்த 07 ஆம் திகதி பணிக்கு சென்றிருந்தபோது காணாமல் போயிருந்தார்.
வீட்டிலிருந்து ஐம்பது மீற்றர் தொலைவிலுள்ள எல்பிட்டிய பள்ளிவாசலிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலிருந்து, குறித்த யுவதி கொலை செய்து புதைக்கப்பட்டதாக தெரியவந்தது.
அதனையடுத்து சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் கடந்த 14 ஆம் திகதி குறித்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
கைதான சந்தேகநபர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதவான் உத்தரவிட்டார்.