பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை முன்வைக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இன்று (26) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ள சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இது தொடர்பில் சபாநாயகரிடம் கோரிக்கை மனு ஒன்றை ஏற்கனவே கையளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அரசாங்க பீடத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த செவ்வாய்கிழமை (22) டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை அடுத்து சபாநாயகரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 74 மில்லியன் ரூபா பெறுமதியான 3 கிலோகிராம் எடையுள்ள அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் 4.2 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான 91 ஸ்மார்ட்ஃபோன்களை வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் எம்பிக்கு ரூ. 7.5 மில்லியன் தண்டப்பணம் அரவிடப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. (யாழ் நியூஸ்)