விசேட தேவையுடைய 26 வயதுடைய பெண்ணை அவரது தாயார் முன்னிலையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து, தாக்கியதாக கூறப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை கொஸ்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தேடப்படும் காவல்துறை கான்ஸ்டபிள், வாழைத்தோட்டம் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர், கொழும்பு பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கான்ஸ்டபிளின் நோய்வாய்ப்பட்ட தாயாரை கவனித்து வரும் குறித்த பெண்ணும் அவரது தாயாரும் கடந்த இரண்டு வருடங்களாக கான்ஸ்டபிளின் வீட்டில் தங்கியுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில், கான்ஸ்டபிள் தனது பணப்பையில் இருந்த 10,000 ரூபா பணத்தை காணவில்லை எனக் கூறி குறித்த தாய் மற்றும் மகளை வீட்டின் அறையொன்றுக்கு அழைத்துச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதன்போது, இந்த பெண்ணிடம் குறித்த கான்ஸ்டபிள் திருமண யோசனை முன்வைத்ததாகவும், அவர் அதனை நிராகரித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருமண முன்மொழிவை நிராகரித்ததையடுத்து, குறித்த கான்ஸ்டபிள், தனது தாயார் முன்னிலையில் தன்னை அடித்து நிர்வாணப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக கொஸ்கம காவல்நிலையத்தில் குறித்த பெண் நேற்று முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
யுவதி இந்த முறைப்பாட்டை செய்வதற்கு முந்தைய தினம், சந்தேகநபரான கான்ஸ்டபிள் தனது பணப்பையில் இருந்த 10,000 ரூபா காணாமல் போயுள்ளதாக கொஸ்கம காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் கூறப்படும் 26 வயதுடைய விசேட தேவையுடைய பெண், மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கொஸ்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.