இன்று உலகில் பாவங்கள் மலிந்து கிடக்கின்றன. ஒரு முஸ்லிம் எந்நிலையிலும் ஹராம், ஹலால் விடயத்தில் பேணுதலுள்ளவனாக இருக்க வேண்டும். நாம் ஒரு ஹராத்தை ஹலாலாக்க முனைவது பெரும் பாவம். நாம் இவ்வாறான பாவங்களை செய்தால், அதனை சந்ததி சந்ததியாக சுமக்க நேரிடும். இவ் விடயத்தில் எமது கலந்துரையாடல்களை கவனமாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைப்பதே பொருத்தமானது.
யூடியூப் வருமானம் ஹராம் என்ற பேச்சு முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவியின் பேச்சை தொடர்ந்தே இலங்கை முஸ்லிம்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது. இது இஸ்லாமிய உலகில் பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்த விவாதமொன்று; இவரின் குறித்த கருத்தை பல நாட்டை சேர்ந்த முக்கிய அறிஞர்களும் கூறியுள்ளனர். இலங்கையை சேர்ந்த பிரபல மார்க்க போதகர்களான அன்சார் தப்லீகி மற்றும் அப்துல் ஹமீத் ஷரயி ஆகியோரும் கூறியுள்ளனர். இவர்களை ஒரு குறித்த குழுவினர் பின் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரபல மார்க்க பிரச்சாரகர் டொக்டர் சாக்கிர் நாயக் கூட, தான் யூ-டியூப் வருமானத்தை பெறுவதில்லை என கூறியுள்ளார். எனவே, குறித்த விடயத்தை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என்பதை இவர்களின் கூற்றுக்கள் எமக்கு துல்லியமாக்கின்றன. தங்களது மார்க்க பிரச்சாரங்களை யூ-டியூப்பில் பதிவு செய்து, உழைக்கும் பிரபல உலமாக்களும் இல்லாமலில்லை.
முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி யூ-டியூப் வருமானத்தை ஹராம் என்றதோடு, அதனை விபச்சார விடுதிக்கும் ஒப்பிட்டிருந்தார். அவர் யூ- டியூப் தளத்தை விபச்சார விடுதிக்கு ஒப்பீடு செய்ததே, பலரது பார்வைகள் வேறு திசைக்கு திரும்பியதற்கான பிரதான காரணம் எனலாம். அவரே யூ-டியூப் தளத்தில், தனது பயான்களை பதிவிட்டுகொண்டு, இப்படி கருத்துரைத்தால், அதனை எப்படி மக்கள் ஏற்பர்?
அவரது கருத்து யூ-டியூபை முழுமையாக பயன்படுத்த வேண்டாம் என்பதல்ல. அப்படி இருந்தால், அவரே அதனை பயன்படுத்த மாட்டாரே! அதன் மூலம் வரும் வருமானம் ஹராம் என்பதே. அவரது வாதம். அவர் குறித்த சொற்பொழிவின் மூலம் யூ-டியூபை எவ்வாறு இஸ்லாமிய வரைமுறைகளுக்குள் பயன்படுத்துவது என கூற வந்தார் எனலாம். யூ-டியூபில் உள்ள நல்ல விடயங்களை எடுத்துக்கொண்டு, கெட்டவைகளை தவிர்ந்து நடக்க வேண்டும் எனும் கோணத்திலேயே, அவர் தனது சொற்பொழிவை அமைத்திருந்தார். மார்க்கத்தை கற்றவர் என்ற அடிப்படையில் நலவை ஏவி, தீமையை தடுக்கும் கடமையும் அவருக்குண்டு.
யூ-டியூப் தளத்தின் மூலம் வரும் வருமானங்கள் ஹராம் என்பதற்கு, அவர் பல நியாயங்களை முன் வைத்திருந்தார். அதில் பிரதானமானது யூ-டியூப்பில் வரும் வர்த்தக விளம்பரங்கள் ஆகும். அந்த விளம்பரங்கள் ஒரு மனிதனின் தேடலுக்கு அமைவாகவே தோன்றும். எமது யூ- டியூப் வீடியோவை நல்லவனும் பார்க்கலாம், கெட்டவனும் பார்க்கலாம். கெட்டவன் மேலும் கெட்ட பக்கம் செல்ல, யூ-டீயூப் தளம், எமது வீடியோ மூலம் வழிகாட்டப் போகிறது. ஒருவர் யூ-டியூப்பில் பதிவிட்ட வீடியோவை பார்த்த இன்னுமொருவன், ஒரு கெட்ட செயலின் பக்கம் தூண்டப்பட்டால், அது எமது தவறல்லவா? எமது வீடியோவை பார்க்க வேண்டுமென்றல்லவா அவன் வந்தான்? அதன் பாவத்தில் எமக்கும் பங்குண்டல்லவா? சிலவேளை நாம் அவரை எனது வீடியோவை பார் என அழைத்துமிருக்கலாம். இந்த கோணத்தில் பார்த்தால் நிச்சயம் ஒருவர் யூ-டியூப்பில் எமது வீடியோ மூலம் தவறான விளம்பரத்தை பார்த்தால், அத் தவறு நிகழ பிரதான காரணமானவர்களில் நாமும் ஒருவர்.
யூ-டியூப் நிறுவனம் எமக்கு எப்படி வருமானத்தை தருகிறது என பார்ப்பதும் பொருத்தமானது. குறித்த யூ-டியூப் தளத்தில் சில விளம்பரம் தோன்றும். விளம்பரம் கொடுத்தவர்கள் யூ-டியூப்பிற்கு ஒரு குறித்த தொகையை வழங்குவார்கள். அதில் ஒரு குறித்த விகிதத்தை யூ-டியூப் நிறுவனம் யூ-டியூப் தளத்தில் வீடியோ பதிவிடுவோருக்கு வழங்கும். இங்கு இருப்பது செயாரிங் பிஸ்னஸ். நாம் மக்களுக்கு கொண்டு செல்லும் விளம்பரத்தின் அளவை வைத்தே எமது பங்கு பிரிக்கப்படும். நாம் பதிவிடும் வீடியோவின் தரத்திற்கு பணம் கிடைக்கவில்லை.
குறித்த விளம்பரத்துக்கும், எமக்கு கிடைக்கும் வருமானத்துக்கும் நேரடி தொடர்புள்ளது. விளம்பரம் செய்யும் நிறுவனத்தின் தரத்திற்கேற்பவும் வருமானம் மாறுபடும். குறித்த விளம்பரம் தவறானதாக இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தவறானது தானே! இதில் மாற்று கருத்திருக்க வாய்ப்பில்லை.
அரச ஊழியர்களின் வருமானம் அரச வருமானத்தில் இருந்து வழங்கப்படுகிறது. அரச வருமானம் மதுவுக்கான வரி உட்பட பல வழிகள் மூலம் கிடைக்கிறது. அப்படியானால், அரச தொழிலும் ஹராமா என சிலர் வீம்புக்கு கேட்கின்றனர். இது இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளது. அரச ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட கடமையை செய்வார்களே ஒழிய, மது விற்க செல்ல மாட்டார்கள். மதுவை அருந்த ஊக்குவிக்க மாட்டார்கள். அவர்களது பணிக்கும் மது விற்பனைக்கும் எந்த வித சிறு சம்பந்தமும் இருக்காது. யூ-டியூப் தள வருமானத்தின் ஒரு குறித்த தொகை கெட்ட விளம்பரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் இருக்கும். இரண்டும் ஒன்றல்ல.
யூ-டியூப் வருமானம் சரியானதா என்பதை ஒவ்வொருவரும் சற்று நிதானமாக யோசிக்க வேண்டும். இது தவிர்ந்து பல வழிகளிலும் ஹராம் எம்மை துரத்து கொண்டு தான் உள்ளது. சிலர், தான் செய்யும் தொழில் ஹலால் என திருப்திபட சில நியாயங்களை தேடுகின்றனர். ஒரு சிறிய நியாயம் தெரிந்தாலும், அது ஹலால் என திருப்தியடைவார்கள். அதற்கு நாம் காரணமாகிவிட கூடாது.
- ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.