போலியான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தது தொடர்பில் 11 வயது பாடசாலை மாணவனை பொலிஸார் எச்சரித்த சம்பவம் ஒன்று நரஹேன்பிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.
தான் பாடசாலைக்குச் சென்று திரும்பும் போது வான் ஒன்றில் வந்த குழுவினர் தன்னைக் கடத்த முயற்சித்ததாகவும் எவ்வாறாயினும் தான் அவர்களிடமிருந்து தப்பித்து வந்ததாகவும் குறித்த சிறுவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பொலிஸார் சிறுவனை ஆழமாக விசாரித்ததன் பின்னர், சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் தான் பார்த்த ஒரு காணொளியை வைத்து இப்படியொரு கதையை தான் உருவாக்கியதாக குறித்த சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாடசாலையிலிருந்து வரும் போது வானில் வந்தவர்கள் தன்னை கொழும்பு பார்க் வீதியில் வைத்து கடத்த முயற்சித்ததாக சிறுவன் தனது தந்தைக்கும் அறிவித்துள்ளான். அதைத் தொடர்ந்து தந்தை மகனுடன் பொலிஸ் நிலையம் சென்று (23) முறைப்பாட்டை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரித்த பொலிஸார் குறித்த பகுதியிலிருந்த சிசிடிவி கமராவை சோதித்த பொலிஸார் குறித்த தினத்தில் அப்பகுதியில் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனக் கண்டறிந்துள்ளனர்.