களுத்துறையில் ஐந்து மாடி விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த 16 வயதான பாடசாலை மாணவி பணத்திற்காக விற்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (15) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த மாணவி பணத்திற்காக விற்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சிறுமியை சந்திப்பதற்கு, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரிடம், சிறுமியின் நண்பியின் காதலன் 20,000 ரூபாய் பணம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான சந்தேகநபரும் சிறுமியை சந்திப்பதற்கு முன்பணமாக 12,000 ரூபாவை சிறுமியின் நண்பியின் காதலனிடம் கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரின் சாரதியாக செயற்பட்டவர், சிறுமியின் நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனைவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவி இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.