நச்சுத் தன்மைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய், இலங்கையில் உள்நாட்டு வியாபாரக் குறியில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அதன் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை பிரச்சினைக்குரியதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நச்சுத்தன்மை கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன் ஒன்று கெக்கிராவ பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டது.
இலங்கைக்கு தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்து வெவ்வேறு இரசாயன திரவங்களை பயன்படுத்தி அவற்றை தூய்மைப்படுத்தி சந்தைக்கு விடுவிக்கின்றமை தொடர்பில் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தேங்காய் எண்ணெய் தொகுதி துறைமுகத்தில் இருந்து எவ்வாறு வெளியேற்றப்பட்டது என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.