தன்னுடைய மூன்று வயதான மகனை தலைகீழாக தூக்கி தரையில் அடித்த தந்தை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (22) ஆஜர்படுத்தப்பட்டார். அதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அவிசாவளை தல்துவ தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதான தங்கராஜ் ரவிச்சந்திரன் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
மகனை தூக்கி தரையில் அடித்த சம்பவம் அவரது வீட்டில் கடந்த 16ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. அவருடைய மனைவி, சம்பவம் இடம்பெற்ற முதல்நாள்தான் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அன்றையதினம் தன்னுடைய நண்பனின் வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மனைவியுடன் கணவன் கதைத்துள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன்போதே வீட்டுக்கு வந்த அவர், தன்னுடைய குழந்தையை தூக்கி தரையில் அடித்துள்ளார். எனினும், தன்னுடைய மகன் கீழே விழுந்துவிட்டார் எனக்கூறி, வைத்தியசாலையில் அவசர, அவசரமாக தூக்கிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் நடந்த சம்பவத்தை, அந்த குழந்தையின் மாமா, பொலிஸாருக்கு தொலைபேசியூடாக தகவல் கொடுத்துள்ளார். அதன்பின்னரே அந்தக் குழுந்தையின் தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த குழந்தையின் தலை பிளந்து காதுகளில் இருந்து இரத்தம் வெளியேறியதால் அக்குழந்தை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் எனினும், மரணமடைந்துவிட்டார்.
என். ஆராச்சி