இந்தியாவில் உடன் அமுலாகும் வகையில் இரண்டாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை இரண்டாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் பெறப்படும் என அந்த வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருப்புப் பண பயன்பாட்டினை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2,000 ரூபாய் நாணயத்தாள்களின் பயன்பாட்டிரன ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதனால், சந்தையில் அவற்றின் பயன்பாடு பெருமளவில் குறைந்து காணப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி 2,000 ரூபாய் நாணயத்தாள்களின் பயன்பாடு 6.73 இலட்சம் கோடியாக இருந்தது.
இது 2023, மார்ச் 31ஆம் திகதியில் 3.62 இலட்சம் கோடியாக குறைவடைந்துள்ளது.
பயன்பாட்டில் உள்ள 2,000 ரூபாய் நாணயத்தாள்களின் மதிப்பில் இது 10.80 சதவீதமாகும்.
இந்தத் தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலேயே அவை வங்கிக்கு வரவில்லை என கருதப்படுகிறது.
எனவே, அவற்றை வங்கிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நாணயத்தாள்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.