முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் எத்தகைய முயற்சிகளுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டாம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இருபது பெண்களை நீதி அமைச்சர் அழைத்து அவர்கள் கோரிக்கையை ஏற்கவேண்டும் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நாட்டில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் வாழும் போது வெறும் இருபது பெண்களின் கோரிக்கைக்கு பின்னால் நீதி அமைச்சர் செல்வதன் மூலம் இதன் பின்னணியில் சியோனிஸம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை தருகிறது.
சில வருடங்களுக்கு முன் முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஒருவர் தனது திருமணத்தை விவாகரத்து செய்து விட்டு தற்போது ஐரோப்பாவில் திருமணத்துக்கப்பால் லீவிங் டு கெதர் என வாழ்வதையும் அதை பெருமையாக சமூக வலையத்தளங்களில் பதிவிடுவதையும் காண்கிறோம்.
முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றும் கோரிக்கைகளுக்கு பின்னால் ஐரோப்பிய சக்திகள் உள்ளன. இவ்வாறு கோரிக்கை விடுவோரில் சிலரை ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் அழைத்து சலுகைகள் வழங்குவதன் மூலம் இவை தெளிவாகிறது.
இந்த நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் பத்து வருடங்களாக பாராளுமன்றில் உண்டும், உறங்கியும் வாழ்ந்து சமூகத்தின் எந்தவொரு உரிமையையும் பெற்றுத்தர வக்கில்லாதவர்களாக இருக்கும் நிலையில் எமது மூதாதையர் பெற்றுத்தந்த முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைத்து அதனை எதிர்காலத்தில் இல்லாமல் செய்யும் துரோகத்துக்கு ஒத்துழைக்க வேண்டாம் என கோருகின்றோம்.
முஸ்லிம் திருமண சட்டத்தில் கைவைக்க முயன்ற கோட்டாபய ராஜபக்ஷ மிக கேவலமாக நாட்டை விட்டு தப்பியோடியதை கண்டோம். அதே போல் முஸ்லிம் திருமண சட்டத்தில் ஜம்மிய்யத்துல் உலமாவின் ஏகோபித்த அனுமதி இன்றி திருத்தம் கொண்டு வர முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயன்றால் நிச்சயம் அவர்களுக்கும் இறை தண்டனை கிடைக்கும் என்பதுடன் எதிர் கால நமது சந்ததிகள் பதுவா செய்து சபிப்பார்கள் என்பதை எச்சரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
நூருள் ஹுதா உமர்