செல்லுபடியாகும் விசாக் காலத்தை மீறித் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை திருத்துவதற்கு நாடாளுமன்ற அமைச்சர்கள் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
குடிவரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டத்தின் கீழ் இது தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுகளுக்கு குழு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், செல்லுபடியாகும் விசாக் காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா கட்டணத்துடன் கூடுதலாக 500 அமெரிக்க டாலர் அபராதத்தை திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தலைமையில் கடந்த வாரம் (25) நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழுவில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையத்தில் இருந்து 7 நாட்களுக்குள் அல்லது விசாவின் காலத்தை நீடிக்காமல், செல்லுபடியாகும் விசாவின் காலத்தை விட குறைவான காலத்திற்குள் புறப்படுவதற்கு அபராதம் விதிக்கப்படக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
07 நாட்களுக்கு மேல் மற்றும் 14 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக தங்கியிருந்தால் 250 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கவும், 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் 500 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், முதலீட்டாளர்களை ஈர்த்தல் மற்றும் இலங்கையில் இயங்கிவரும் வெளிநாட்டுத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மேற்படி தண்டப்பணம் செலுத்த வேண்டியிருப்பதால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த உத்தரவுகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட உள்ளன.