தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (09) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்தவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்க கோரி ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கே.அதுல எச்.டி சில்வா, ஷெனாலி டி.வடுகே மற்றும் ஜெஹான் ஹமீட் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்படி, இந்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நிறைவு செய்த உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலத்தின் சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா அல்லது முரணானதாக என்ற தமது முடிவை நாடாளுமன்ற சபாநாயகரிடம் இரகசியமாக வழங்குவதாக அறிவித்தது.
இந்த திருத்தம் தண்டனைச் சட்டம் தொடர்பான நாடாளுமன்றின் எதிர்பார்ப்புகளுக்கு முரணானது என்றும், அதன் மூலம் அரசியலமைப்பின் விதிகளை கடுமையாக மீறப்படுவதாகவும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு ஏற்புடையதல்ல என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்ற உறுப்பினர் தொலவத்தவினால் முன்வைக்கப்பட்ட குறித்த சட்டமூலம், தன்பாலின சேர்க்கையை குற்றமற்றது என விளக்க முயற்சிக்கும் அதேவேளையில் அத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.