39 பேருடன் பயணித்த சீன மீன்பிடி கப்பலொன்று, இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள தமது தூதரகங்கள் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துவருவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய இந்தியப் பெருங்கடலில் Lu Peng Yuan Yu 028 என்ற இந்த சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்ததாகவும் அதில் இருந்த 17 சீனர்கள்,17 இந்தோனேசியர்கள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை கொண்ட அதன் பணியாளர்களைக் காணவில்லை என்று சீன ஊடகமொன்று இன்று (17) தெரிவித்துள்ளது.
கடந்த 03ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனிலிருந்து புறப்பட்ட நீளமான இந்த மீன்பிடி கப்பல், மாலைதீவுக்கு தெற்கு திசையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கப்பல் கண்காணிப்பு இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் சீன நேரப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணிககு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.